''கோட்டபாய ஏன் நீதிமன்றில் ஆஜராகவில்லை.. ? " விடுக்கப்பட்ட முக்கிய கோரிக்கை



 2011 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் முன்னிலை சோஷலிசக் கட்சியின் செயற் பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தம் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணையில், வாக்குமூலம் வழங்க நேற்று திங்கட்கிழமை அவர்களது சகோத ரிகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகினர்.

இந்த சந்தர்ப்பத்தில், முன்னிலை சோஷலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட, லலித் குமார் வீரராஜின் தந்தை ஆறுமுகம் வீரராஜ் மற்றும் காணாமல் போனதாக கூறப்படும் இருவரின் இரு சகோதரிகள் முன்னிலையாகியிருந்தனர்.

இதன்போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த லலித் குமாரின் தந்தை,

இந்த விசாரணைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு நீதிமன்றங்களில் பல தடவைகள் முன்னிலையானேன்.
அத்துடன், இந்த வழக்கின் நிமித்தம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை நீதிமன்றத்தில் முன்னிலையாகும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட போதிலும், அவர் இதுவரை முன்னிலையாகாமை கவலையளிக்கின்றது.

"மீண்டும் ஒருமுறை குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு விசாரணைக்கு எம்மை அழைத்துள்ளனர். இந்த அரசாங்கத்திடமிருந்து நூற்றுக்கு நூறு வீதம் நீதி கிடைக்கும் என நாங்கள் நம்புகிறோம்,' என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, புபுது ஜயகொட கருத்து தெரிவிக்கையில் ,

2011 ஆம் ஆண்டு இந்த இருவரும் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில், குறைந்தபட்சம் இந்த அரசாங்கத்திலாவது நீதி கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

2011 ஆம் ஆண்டு, அப்போதைய ஊடகப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல, லலித் மற்றும் குகன் ஆகியோர் கடத்தப்படவில்லை அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார் என அவர் தெரிவித்துள்ளார்.